Monday 29 April 2013

மூலதனம் வாசிப்பதற்கான வழிகாட்டி


மூலதனம் வாசிப்பதற்கான வழிகாட்டி.... by ரகுமான்ஜான்
http://www.marxists.org/archive/marx/works/1867-c1/guide/index.htm

மூலதனம் : ஒரு அறிதலை நோக்கி…. பகுதி 1

மூலதனம் : ஒரு அறிதலை நோக்கி…. பகுதி 1
das-kapitalமுன்னால் காதலர்கள் இருவர் நீண்ட காலத்தின் பின்பு  மீள ஒரு நாள் சந்திக்கும் பொழுது ஒரு பரவச நிலை தோன்றுமே….
(இப்பொழுது  வேறு யாருடன் வாழ்ந்தபோதும்)
அவ்வாறான மனநிலைதான் தமிழில் தியாகு அவர்கள் மொழிபெயர்த்த (அவருக்கு நன்றிகள்) கார்ல் மார்க்சின் மூலதனம் நூலை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது…  இவ்வாறான வாசிப்பை ஆரம்பிப்பதற்கு மூலதனம் என்ற நூலை விளங்கிக் கொள்வதற்காகவும் கற்பதற்கானதுமான கல்வி வட்டத்தை உருவாக்கிய நண்பர்களுக்கு நன்றி கூறத்தான் வேண்டும். இல்லையெனில் இப்பொழுதும் அதற்கு நேரம் ஒதிக்கி முயற்சிப்போமா என்பது கேள்விக்குறிதான். தமிழ் மொழிபெயர்ப்பு சில இடங்களில் வாசிப்பு இயக்கத்தை தடக்கியபோதும்…. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் என்னுடன் (அல்லது எங்களுடன்) உரையாடுவது போன்றே  உணர்ந்தேன்… முதல் அறுபது பக்கங்களும் ஜெர்மன் மொழியினது முதல் பதிப்புக்கும் அதன் மூன்று மீள்பதிப்புகளுக்கும்  மற்றும் பிரஞ்சு, ஆங்கில மொழிப் பதிப்புகளுக்காக இவர்கள் எழுதிய முன்னுரைகளைகளையும் கொண்டுள்ளன ….மூலதனம்
1867ம் ஆண்டு முதல் பதிப்பிலிருந்து, 1872ம், 1873ம், 1875ம், ஆண்டு வரை  ஜெர்மன் மறு பதிப்புகளுக்கும் மற்றும் பிரஞ்சு மொழி பதிப்புகளுக்கு கார்ல் மார்க்ஸ் அவர்களே முன்னுரைகளும் பின்னுரைகளும் எழுதியிருக்கின்றார்….  இந்த முன்னுரைகளில் எவ்வாறு ஆரம்பத்தில் எழுதியதையும் பதிப்பித்ததையும் தான் மீளவும் திருத்தி திருத்தி செழுமைப்படுத்தியதைக் குறிப்பிடுகின்றார். மேலும் புதிதாக அறிந்ததை இணைத்து மற்றும் விமர்சனங்கள் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மற்றும் பல விடயங்களுக்கும் சொற்களுக்குமான விளக்கங்களை அளித்தது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றார்.
இயக்கவியல் என்பது ஹெகலிடம் தலைகீழாக நின்று கொண்டிருந்தது… அதனை நேராகத் திருப்பி நிறுத்த வேண்டும் என மார்க்ஸ் கூறுகின்றார்…  மேலும் ஹெகல் கருத்துதான் பொருளைக் கட்டமைக்கின்றது என்றார்.  ஆனால் மார்க்ஸ் பொருள்தான் கருத்தைக் கட்டமைக்கின்றது என்கின்றார்… சுருக்கமாகக் கூறின் இதனையே  ஹெகலை தலைகீழாகப் புரட்டியவர் மார்க்ஸ் எனப் பொதுவாகக் கூறுவதுண்டு…
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹெகலுக்கு எதிரானவர்கள் தனது கூற்றை அடிப்படையாகக் கொண்டு அவரை மோசமாகத் தாக்கினர் என்கின்றார் மார்க்ஸ்… இவ்வாறான பண்பற்ற தாக்குதலை மார்க்ஸ் ஆதரிக்கவில்லை.  ஆகவே இத் தாக்குதலை விமர்சிக்கும்  மார்க்ஸ், தான் ஹெகலின் கருத்தைத் தலைகீழாகப் புரட்டியபோதும் தனக்கு அவர் மீது பெரும் மதிப்பு இருக்கின்றது என்பதற்காக பல கட்டுரைகளை எழுதியதாக குறிப்பிடுகின்றார்… அவற்றில் … ஹெகலின் மாணவர் தான் என்பதை பகிரங்கமாக அறிவித்தது மட்டுமன்றி அவரை மாபெரும் சிந்தனையாளராக மதிப்பதாகவும் கூறுகின்றார்.. மேலும் ஹெகல் தான் இயங்கியல் என்பதன் பொதுவான செயற்பாட்டுவடிவத்தை விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் முதன் முதலாக முன்வைத்தவர்… எனவும் மார்கஸ் கூறுகின்றார்….
இந்த இடத்தில் தான் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும்… நாம் ஒருவருடன் கருத்து முரண்பட்டால் மட்டுமல்ல சிறு முரண்பாடுகள் ஏற்பட்டாலும் எவ்வாறு எதிர் நிலைக்குச் சென்று அவர் மீது சேறு பூசி அவரைக் கீழ்த்தரமாக தாக்குவதற்காக நம்மை நாமே கீழ் நிலைக்கும் கொண்டு செல்கின்றோம்  என… ஆனால் மார்க்ஸ் ஒருவர் மீதான விமர்சனத்தையும் மதிப்பையும் மிகவும் பொறுப்புணர்வுடன் பயன்டுத்துகின்றார். மார்க்ஸ் ஹெகலிடமிருந்து கருத்தியல் அடிப்படையில்தான் முரண்பட்டுதான் எதிர் நிலைக்கு சென்றார்… மாறாக ஹெகல் என்ற மனிதரை சிந்தனையாளரை எதிரியாக கருதவில்லை…  மற்றவர்களும் ஹெகலை பண்பற்று தாக்குவதற்கு அனுமதிக்கவில்லை……   மேலும் மார்க்ஸ் தனது படைப்புகளுக்கு எழுதுபவரின் பெயரில்லாது கூட முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் மிகவும் பொறுப்புடன் பதிலளித்திருக்கின்றார்…
இந்த முன்னுரைகளில் கவனிக்க வேண்டிய இன்னுமொன்று உள்ளது. அது ஏங்கெல்ஸின் பொறுப்புணர்வும் தோழமையுணர்வும்…. ஜெர்மனிய பதிப்பின் மூன்றாவது பதிப்பிற்கு 1883ம் ஆண்டு நவம்பரில் முன்னுரை எழுதும் பொழுது மார்க்ஸ் இதே ஆண்டு மார்ச் மாதம் இறந்ததைக் குறிப்பிடுகின்றார். ஆனாலும் மார்க்சின் குறிப்புக்களை தேடி எடுத்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி மார்க்சின் முயற்சிகளுக்கு களங்கம் ஏதுவும் ஏற்படாதாவாறு தனது செயற்பாட்டை முன்னெடுப்பதாக  குறிப்பிடுகின்றார்… இதவேளை மார்க்ஸ் இருந்த காலத்திலிருந்து இறந்த பின்பு வரை குறிப்பான ஒரு விடயம் தொடர்பாக மார்க்ஸ் வழங்கிய ஊசாத்துணையானது தவறு என அவர் மீது விமர்சனம் என்பதைவிட சிலர் சேறுபூசி வந்தனர் …  ஆனால் இந்த ஊசாத்துணையானது தவறானதல்ல… சரியானது என நிறுபிக்கவும் அதேவேளை எவ்வாறு குறிப்பிட்ட ஊசாத்துணைக்குறிய விடயம் அதிகாரத்திலிருப்பவர்களால் அகற்றப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் நிறுபிக்க முயற்சிக்கின்றார்…. இது இன்று வாசிப்பதற்கு மிகச் சிறிய விடயமாக இருக்கலாம்…. ஆனால் முக்கியமானது…  இவை தான் தோழர் ஒருவரின் தோழமையும் பொறுப்புணர்வும் என்றால் தவறல்ல… ஆனால் இதையெல்லாம் இன்று நாம் காணமுடியாது இருக்கின்றமை துர்ப்பாக்கியமான நிலமையே…. இதனால் தான் தோழர் என யாரும் என்னை அழைப்பதை நான் விரும்புவதுமில்லை மற்றவர்களையும் தோழர் என விழித்து நான் அழைப்பதையும் தவிர்த்தே வருகின்றேன்…. இன்று தோழர் என்கின்ற வார்த்தை மிகவும் மலினப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலரால் நக்கலடிப்பதற்குமே பயன்படுத்தப்படுகின்றது என்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்….
மேற்குறிப்பிட்டவை நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் மட்டுமல்ல கற்பதற்கும் நிறயை இருக்கின்றது என்பதையே சுட்டி நிற்கின்றது எனலாம்…. ஏனெனில் விடுதலை, சமூகமாற்றம், சுந்திரம் என்பது வெறுமனே ஆட்சி மாற்றமும் அரசியல் மாற்றமும் மட்டுமல்ல… மனித  பண்பு மாற்றமும் வளர்ச்சியும் அதுடன் இணைந்திருக்கின்றது என்றால் மிகையல்ல… இதற்கு மாறாக தம்மைத் தாமே வெறுமனே மார்க்சிய வாதிகள் எனக் கூறுவதுடனும்… மார்க்சின் கூற்றுக்களை தமது கட்டுரைகளின் பயன்படுத்துவதுடனும் மட்டும் நமது வளர்ச்சி  நின்றுவிடுவதில்லை…. அதற்கு அப்பாலும் பல விடயங்கள் இருக்கின்ற கற்றுக்கொள்வதற்கு…. உள்வாங்குவதற்கு… வளர்வதற்கு….
மீண்டும் ஹெகலுக்கு வரும் பொழுது….  எனக்கு ஒரு கேள்வி நீண்ட காலமாக இருக்கின்றது… ஹெகலை மார்க்ஸ் தலைகீழாகப் புரட்டியவர் என ஒரு சூத்திரமாக வாய்ப்பாடாக மீள மீள நாம் கூறி வந்திருக்கின்றோம்… அப்படியே மார்க்ஸ் கூறியதை நம்பி ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்… ஆனால் ஒரடி பின்னால் சென்று ஹெகல் என்ன கூறினார் என்பதை அவரது படைப்பலிருந்து விரிவாகவும் ஆழமாகவும் ஆராய முற்பட்டதில்லை….  ஆகவே இன்றைய எனது சந்தேகம், ஹெகலை தலைகீழாகப் மார்க்ஸ் புரட்டியது சரியா என்பதே எனது கேள்வி…. மார்க்ஸை தவறு எனக் கூறவில்லை…. ஆனால் தலைகீழாக புரட்டாது நடுநிலையில் வைத்திருக்கலமோ என்ற ஒரு ஆதங்கம் இருக்கின்றது… ஆனால் இதற்கான பதிலை ஹெகலைப் படித்துவிட்டே கூறலாம் என நினைக்கின்றேன்…. அதற்கு முதல் மூலதனத்தைக் கற்பதிலிருந்து ஆரம்பிக்கப் போகின்றோம்.
மூலதனம் நூலை வாசிக்கும் அதேவேளை நான் விளங்கியவற்றை சிறு குறிப்புகளாக தொடர்ச்சியாக பதிவு செய்யப் போகின்றேன். அதேவேளை இது தொடர்பான கல்வி வட்டத்தில் பங்கு பற்றி புதிய விளங்கங்களைப் பெறும் பொழுது அதனையும் பதிவு செய்யப்போகின்றேன். இதன் மூலம் தனிப்பட்ட வாசிப்பும் குழு வாசிப்புக்கும் இடையிலான வேறு பாட்டை காண முயற்சிக்கலாம். அதேவேளை நண்பர்களே… உங்களில் யாராவாது மூலதனத்தை ஏற்கனவே வாசித்திருந்தால் உங்கள் புரிதல்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். இவ்வாறான கூட்டு முயற்சியின் மூலமாக நமது புரிதல்களை விரிவாக்கவும் ஆழமாக்கவும் முயற்சிப்போம்.
ஒரு தூப்பாக்கி எடுத்து மற்றவரை சுட்டுக் கொல்வது மிக இலகுவானது…. ஆனால் ஒரு மனிதரையும் அவர் சார்ந்த சமூகத்தையும் புரிந்து கொள்வதற்கு நிறைய அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் பொறுமையும் தேவைப்படுகின்றது…. அவ்வாறான ஒரு அர்ப்பணிப்பை வழங்க நாம் தயாரா…?
மீராபாரதி
06.02.2013

Sunday 28 April 2013

மூலதனம் - படிப்பு வட்டம் - முதல் அத்தியாயம்

இன்று (28-04-2013)  மாலை 11 பேர்களடங்கிய குழு ஒன்று கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலைப் படிக்கும் முயற்சியைத் தொடங்கியது. கனடா ஸகாபுரோவில் நடைபெற்ற இந்த படிப்பு முயற்சி மிகுந்த மன நிறைவைத் தந்தது.